மக்கள் நீதி மைய்யத்தின் தலைவர் நடிகர் கமல் நேற்று தனது கட்சியின் அங்கீகாரம் குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு சென்றார். பின்னர் மாலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமல், மரியாதை நிமித்தமான முறையில் ராகுலைச் சந்தித்துப் பேசியதாக தெரிவித்தார். மேலும், ராகுலுடன் அரசியல் பேசியதாகத் தெரிவித்த கமல், தமிழ்நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற குசல விசாரிப்பாகத் தங்களது பேச்சு அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியிடம் பேசியது பற்றி செய்தியாளர் சந்திப்பில் சொல்ல முடியாது என்று கூறிய கமல் கூட்டணி குறித்து அவரிடம் தான் எதுவும் பேசவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதே நேரத்தில் கமலுடனான தனது சந்திப்பு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில், தங்களது சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்ததாகவும், தமிழக அரசியல் சூழல் உட்பட, இரு கட்சிகள் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாகப் பேசியதாக கூறியுள்ளார் ராகுல்.