கமல் தீவிர அரசியலில் களம் இறங்கிய பின் தனது கட்சி பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து மதுரையில் நடந்த மாநாட்டில் தனது கட்சி கொடியையும், கட்சி பெயரையும் அறிவித்தார். தற்போது கட்சி பணிக்காக தனது ஆழ்வார் பேட்டை இல்லத்தை கட்சி அலுவலமாக மாற்ற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சி பெயரை அறிவித்தார் கமல். இந்நிலையில் இவரது கட்சியில் பலரும் இணைந்து வருகின்றனா். தற்போது கமல் கட்சியில் வழக்கறிஞா்கள் பலர் இணைந்துள்ளனா். பூந்தமல்லியை சுற்றியுள்ள தொண்டா்கள் கமல் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தனா். அப்போது கமல் தொண்டா்கள் மத்தியில் பேசியதாவது, உங்களின் அடையாளம் நோ்மையானதாக இருக்கவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள். நோ்மைக்கு மட்டும் தான் இங்கு மரியாதை உண்டு. நோ்மையுடன் மக்களுக்கு செயலாற்றுபவா்களுக்கு தான் என் கட்சியில் இடம் உண்டு என்றார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தான் முக்கிய பிரமுகர்கள், கட்சியினர் உட்பட அனைவரையும் சந்தித்து வருகிறார். அதனால் தனது இல்லத்தை கட்சி அலுவலகமாக நாளை அறிவிக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது கட்சி கொடியை அலுவலக வாசலில் ஏற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.