விஸ்வரூபம் 2 திரைப்படம் ஒரு வழியாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்திற்கு எதிர்ப்பு வந்தால் அதனை அரசியல்வாதியாக எதிர்கொள்வேன் என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதனையடுத்து செய்தியாளர்களை நடிகர் கமல் சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஸ்வரூபம் 2 படம் தாமதமாக வெளியாவதற்கு தயாரிப்பு நிறுவனமோ, நானோ காரணமல்ல. இப்படத்தின் முதல் பாகம் தாமதமானதற்கு என்ன காரணம், யாா் காரணம் என்று அனைவருக்கும் தொியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் பல்வேறு நாடுகளில் திரையிடப்பட உள்ளது. அமெரிக்காவில் ஹாலிவுட் திரைப்படம் எத்தனை தியேட்டர்களில் திரையிடப்படுமோ அந்த அளவிற்கு விஸ்வரூபம் 2 திரையிடப்பட உள்ளது. ஹாலிவுட்டிற்கு நிகராக இந்திய படம் திரையிடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும், விஸ்வரூபம் 2 -க்கு ஒருவேளை எதிா்ப்புகள் வரும் பட்சத்தில் அதனை எதிா் கொள்ள அரசியல்வாதியாக நான் தயாராகிவிட்டேன். சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளக் கூடாது என்றார் கமல்.