ஹாலிவுட்டை மிஞ்சிவிட்டதாக நினைக்க வேண்டாம்: பாகுபலி 2′ குறித்து கமல்

கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ‘பாகுபலி 2’ படத்தை உலகமே போற்றி கொண்டாடுகிறது. ஒரு தென்னிந்திய திரைபப்டம் உலக அளவில் பேசப்படுவது இதுவே முதல்முறை மட்டுமின்றி ரூ.1500 கோடி வசூலையும் நெருங்கி புதிய சாதனை செய்துள்ளது.

இந்த சாதனையை உலகமே  கொண்டாடி வரும் நிலையில் உலகநாயகன் என்று கூறப்படும் கமல் மட்டும் இதுவரை இந்த படம் குறித்து எந்த கருத்தையும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் முதல்முறையாக இன்று இந்த படம் குறித்து வாய் திறந்துள்ளார்.

அவர் கூறியதாவது; பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி’. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்.

படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது.

‘பாகுபலி’ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்.

இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.