எல்லா மாடுகளும் மணியடிக்க கூடாது: கமல்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த அளவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கும் என்று விஜய் டிவியே எதிர்பார்த்திருக்காது. இந்த நிகழ்ச்சி குறித்து புதிய தலைமுறை உள்பட தொலைக்காட்சிகளில் விவாதம் செய்யும் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சாரம் சீரழிவதாகவும், இதனால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கமல் உள்பட அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது என்பதை நேற்று பார்த்தோம்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள கமல்ஹாசன், ‘இந்தியில் இந்த நிகழ்ச்சி 11 வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கன்னடத்திலும் ஒளிபரப்பாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு இந்தியும் தெரியாது, கன்னடமும் தெரியாது என்பதால் தமிழில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது புகார் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கலாச்சாரம் மட்டும் தெரியும். இருப்பினும் என் மீது புகார் கொடுத்தவர்களும் எனது ரசிகர்கள்தான் என்னை சிறையில் வைத்து அழகு பார்க்க நினைக்கும் ரசிகர்கள்’ என்று கூறினார்

மேலும் கன்றை இழந்த பசுதான் ஆராய்ச்சி மணி அடித்து நீதி கேட்க வேண்டும். எல்லா மாடுகள் எல்லாம் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது. பிக்பாஸ் நிகழ்ச்சியால் யாராவது பாதிக்கப்பட்டதாக கூறினால் அவர்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்’ என்று கூறினார்.