முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் கமல், அரசியல் களம் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக அரசு மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருகிறார். தற்போது எந்த பேட்டியென்றாலும், பொது நிகழ்ச்சியென்றாலும், டுவிட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்களாகட்டும் அரசியல் நெடி இல்லாமல் இருப்பது இல்லை. கூடிய விரைவில் அவர் அரசியல் களத்தில் குதிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதற்கு அவரே பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, எனக்கு அரசியல் சிந்தனை எல்லாம் உண்டு. ஆனால் எந்த கட்சி கொள்கைகளுடனும் எனது சிந்தனை ஒத்துப் போகாது. சமீபத்தில் நான் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்தேன். உடனே நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப் போவதாக கூறிவிட்டனர்.

எனக்கு எந்த கட்சியுடனும் சேரும் எண்ணம் இல்லை. நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். ஆனால், இது நானாக எடுக்கும் முடிவாக இருக்காது. கட்டாயத்தின் பேரில் எடுக்கும் முடிவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கமல் அளித்திருக்கும் இந்த பேட்டியை வைத்து பார்க்கும்போது கூடிய விரைவில் அரசியல் களத்தில் கமல் இறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.