கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகிறது இந்தியன்-2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல்-ஷங்கர் கூட்டணியில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த படம் ‘இந்தியன்’. அரசு மட்டத்தில் நடக்கும் ஊழலை இந்த படம் தெளிவாக சுட்டிக்காட்டியது. இந்த படத்தில் கமல் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப்போவதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உலாவி வந்தது.

அந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. கமல் – ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன்-2’ விரைவில் தயாராக உள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்கவிருக்கிறார்கள். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி நிகழ்ச்சியில் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல் அரசியலில் களமிறங்கவிருக்கும் இந்த சூழ்நிலையில், ‘இந்தியன்-2’ படம் உருவாகவுள்ளது அவருடைய அரசியல் என்ட்ரிக்கு சிறப்பானதொரு அடித்தளமாக அமையும் என்று நம்பலாம். விரைவில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என நம்பலாம்.