ராஜினாமா செய்யுங்கள் – அரசுக்கு எதிராக பொங்கியெழுந்த கமல்ஹாசன்

 

நாட்டில் இவ்வளவு ஊழல் நடக்கும் போதும், அதை சரி செய்யாத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஊழல், நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் பற்றி சமீபத்தில் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மூன்று கருத்துகளை ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார்.முதலில், தமிழகத்தில் ஊழல், கோர சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியும் அவரின் ராஜினாமாவை கோராதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த டிவிட்டில் “ சிறந்த தமிழகத்தை உருவாக்குவதுதான் என் நோக்கம். என்னுடைய குரலுக்கு வலிமை சேர்ப்பதற்கு யாருக்கு தைரியம் இருக்கிறது? அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இதற்கு உதவ வேண்டும். இல்லையேல், வேறொரு மாற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்ட்டுள்ளார்.

மற்றொரு டிவிட்டில் “சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.

இவரின் கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து அரசுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த கருத்துக்கள் மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாகி வருகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.