வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.இந்த கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் எனத்தெரிகிறது. பாமக கட்சியுடனும் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

ரஜினிகாந்த் இந்த தேர்தலில் போட்டியில் ஆர்வம் காட்டவில்லை. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “கூட்டணி அமைத்து கறை பட விரும்பவில்லை. எனவே, 40 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும். 40 தொகுதியிலும் யார் வேட்பாளர்கள் என்பதை விரைவில் அறிவிப்போம்” என அவர் தெரிவித்தார்.