ஆமாம்..பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் நடத்துகிறேன் – ஒப்புக்கொண்ட கமல்ஹாசன்

மும்பை தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை, தமிழில் தானே நடத்த இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெற்றி கதாநாயகனாக வெள்ளித்திரையில் வலம் வந்து கொண்டிருப்பவர்.

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளாரே தவிர, நிகழ்ச்சிகள் எதையும் அவர் தொகுத்து வழங்கியதில்லை. விளம்பரத்தில் கூட நடித்திருக்காதவர், கடந்த தீபாவளியன்று போத்தீஸ் நிறுவன விளம்பரத்தில் மட்டும் நடித்தார்.

இந்நிலையில், தற்போது அவர் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஹிந்தி தொலைக்காட்சியில் மெகா ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதை கமல்ஹாசன் நடத்தினால் சரியாக இருக்கும் என்பதால், இதுபற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் எதுவும் வெளியாக நிலையில், அந்த நிகழ்ச்சியை தான் நடத்துவது உண்மைதான் என கமல்ஹாசன் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில் “ஒரு பொழுதுபோக்களராக பல செயல்களை செய்திருக்கிறேன். ஆனால், தொலைக்காட்சி தொடரையோ, நிகழ்ச்சியையோ இதுவரை நான் தொகுத்து வழங்கியதில்லை. மேலும், எந்த ரியாலிட்டி நிகழ்ச்சியின் இதுவரை நான் பங்கேற்றதில்லை. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் தமிழில் நடத்துகிறேன். எனக்கு அனுபவம் இல்லாத ஒன்றாக இருந்தாலும், ஆவலுடன் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.