மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரைத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு ஜி.எஸ்.டி வரி 28% என்பதை இறுதி செய்தது. தற்போது தமிழகத்தில் 30% கேளிக்கை வரி இருந்தாலும் தமிழில் டைட்டில் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் ஜூலை 1 முதல் வரிவிலக்கு என்பது கிடையாது. 28% வரி கட்டியே ஆகவேண்டும். இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜிஎஸ்.டி வரிவிதிப்பை கண்டித்து  தென்னிந்திய வர்த்தக சபை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இன்று நடந்த இந்த கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ‘சினிமா என்பது கலை, அது சூதாட்டம் அல்ல, புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி திரைப்பட தயாரிப்புக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க உள்ளதாக அறிய வருகிறோம்.

ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வரி என்ற அடிப்படையில் திரைத்துறைக்கு ஒரே மாதிரியான வரியை கொண்டு வருவது சரியானதாக இருக்காது. இந்தி சினிமாவுக்கு இணையாக பிராந்திய மொழி படங்களுக்கு வரி விதிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகாத ஒன்று.

இந்தி மொழி திரைப்படங்களுக்கு சந்தை வேறு, பிராந்திய மொழி படங்களுக்கான சந்தை வேறு. மேலும் சூதாட்ட விடுதிகளுக்கும் 28 % வரி திரைப்படங்களுக்கும் 28% வரி என்பதை எப்படி ஏற்பது. மேலும் இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு, இங்கு ஒற்றை கலாச்சாரம் பழக்க வழக்கம் ஆகியவற்றை கொண்டு வரவே முடியாது. அப்படி முயற்சிப்பது வீண்.

இது போன்ற நடவடிக்கைகள் அங்கு தான் இட்டுச் செல்லும் பிராந்திய மொழி படங்களுக்கு இந்த அளவுக்கு வரி விதித்தால் அது மூழ்கும் நிலையே உருவாகும். இந்த வரிவிதிப்பை ஒழுங்குபடுத்தாவிட்டால் நான் உள்பட பலர் திரைத்துறையில் இருந்து விலக நேரிடும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.