ஜெகன்மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்கிறேனா? கார்த்தி விளக்கம்

karthi

ஆந்திராவின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என நடிகர் கார்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திராவின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடிக்கிறார். அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேடத்துக்கு கார்த்தியை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில் கார்த்திக்கு ஆந்திரா,தெலுங்கானாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது திரைப்படங்கள் நேரடியாக தெலுங்கில் வெளியாகி வருகிறது. கார்த்தி விவசாயியாக சமீபத்தில் நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆந்திராவில் சின்னபாபு என்ற பெயரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டியாக கார்த்தியை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புவதாக தகவல் பரவியது. மேலும் இப்படத்தை வரும் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துககு பயன்படுத்த அவர்கள் திட்டமிடுவதாக கூறப்பட்டது.

இதுகுறித்து கார்த்தி கூறுகையில், ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. நான் ‘தேவ்’ என்ற படத்தில் நடிப்பதற்காக உக்ரைன் செல்கிறேன். இந்த படத்தில் கதாநாயகியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். லட்சுமண் தயாரிக்கிறார். ரஜத் இயக்குகிறார்’’ என்றார்.

இதற்கிடையே ஆந்திராவின் முன்னாள் முதல்வரான என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறும் திரைப்படம் ஆகிறது .அவரது வேடத்தில் பாலகிருஷ்ணாவும் நடிக்கின்றனர். என்.டி.ராமராவ் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.

இதே படத்தில் சந்திரபாபு நாயுடுவாக ராணாவும், சாவித்திரியாக கீர்த்தி சுரேசும், எஸ்.வி.ரங்காராவாக மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.