ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்கியதற்கு நடிகர் தனுஷே முக்கிய காரணம் என அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான பேட்ட படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. குறிப்பாக ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். காரணம் 90களில் வெளியான ரஜினி படங்களில் இருந்து துள்ளல், ஸ்டைல், சண்டைக் காட்சிகள் ஆகியவை பேட்ட படத்தில் இடம் பெற்றிருந்தது. கார்த்திக் சுப்புராஜே ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதால் பேட்ட படத்தை ரசித்து ரசித்து இயக்கியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பிரபல இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் “பேட்ட படம் இயக்கியதற்கு தனுஷே காரணம். உண்மையில், தனுஷ் நடிக்கும் படத்தைத்தான் நான் இயக்க இருந்தேன். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஏப்ரலில் படப்பிடிப்பு செல்ல திட்டமிட்டிருந்தோம். அப்போதுதான் தலைவர் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.

எனவே, தனுஷிடம் நேரில் சென்று கூறினேன். இது என் கனவு படம். இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்குமா என தெரியாது என நான் கூறியதை தனுஷ் ஏற்றுக்கொண்டார். என் படத்தை முடித்து விட்டு செல்லுங்கள் என அவர் கூறியிருந்தால் என்னால் பேட்ட படத்தை இயக்கியிருக்க முடியாது” என அப்பேட்டியில் கூறியுள்ளார்.