சினிமா வசூலை வைத்து சிலர் பிழைப்பு நடத்துகின்றனர் என கார்த்திக் சுப்புராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி 10ம் தேதி பொங்கல் விருந்தாக விஸ்வாசம், பேட்ட இரு படங்களும் வெளியானது. எனவே, அஜித், ரஜினி ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டனர். குறிப்பாக, பேட்ட படத்தை காட்டிலும் விஸ்வாசம் படமே அதிக வசூலை பெற்றிருப்பதாக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் விஸ்வாசத்தோடு போட்டியிட்டு பேட்ட படம் தோல்வி அடைந்துவிட்டதாக மீம்ஸ்களும் உருவாக்கி உலவ விட்டனர்.

ஒருபக்கம், சில ஆன்லைன் சினிமா விமர்சகர்கள் படங்களின் வசூல் நிலவரங்களை வெளியிட்டு இரு படங்களையும் ஒப்பிட்டு கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் “ எந்த ஓட்டலிலாவது வெளியே இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டது என அறிவிப்பு பலகை வைத்துள்ளார்களா? உணவு நன்றாக இருக்கிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். அதுபோலத்தான் திரைப்படங்களும். ஒரு படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும். படத்தின் வசூலை பற்றி பேசுவது தேவையில்லாத விஷயம். இப்படி வசூல் நிலவரங்களை பற்றி பேசுவதெல்லாம் சிலருக்கு தொழிலாகி விட்டது. படத்தின் வசூல் பற்றி செய்திகளை வெளியிட்டு ட்ராக்கர்ஸ் என்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். இதை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.” என காட்டமாக தெரிவித்துள்ளார்.