திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர் முதல்வராக இருந்தபோது தனது நண்பர் ஒருவருக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

திருவாரூரை சேர்ந்த கு.தென்னன் மீது கருணாநிதி மிகுந்த அன்பு வைத்திருந்தார். சிறு வயது நண்பரான தென்னன் கடந்த 2008-ஆம் வருடம் அக்டோபரில் கருணாநிதியை பார்க்க அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஏதோ ஒரு மூடில் அவரை திட்டி விடுகிறார்.

நண்பர் கருணாநிதி திட்டியதால் கு.தென்னன் திருவாரூருக்குக் கிளம்பிப் போய்விடுகிறார். அதன் பின்னர் தன் நண்பனின் மனதை காயப்படுத்திவிட்டதை உணர்ந்து மனம் வருந்துகிறார் கருணாநிதி. உடனே தலைமைச் செயலகத்தில் அமர்ந்து தனது லெட்டை பேடை எடுத்து கடிதம் எழுத ஆரம்பிக்கிறார் அவர்.

அதில், அன்புள்ள நண்பர் தென்னனுக்கு, நீ சென்னையில் வீட்டுக்கு வந்தபோது, அன்று என்னைக் கப்பியிருந்த சோகத்திலும், கோபத்திலும் உன்னை மனம் நோகச் சொன்ன வார்த்தைகளுக்காக வருந்துகிறேன். வழக்கம்போல் பொறுத்துக்கொள்க. என்றும் உன் நண்பன், முக. என கருணாநிதி தன் கைப்பட மன்னிப்பு கேட்பதுபோல் வருத்தம் தெரிவித்து எழுதியுள்ளார். ஒரு முதல்வராக இருந்தாலும், எந்த ஒரு பெருமையும் இல்லாமல் நண்பரிடம் நடந்து தவறுக்கு மன்னிப்பு கேட்பது நட்பில் எத்தனை உத்தமம்.