திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய திமுகவினர் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு திமுகவினர் அளித்த மனுவை ஏற்றுக்கொண்டு கலைஞருக்கு மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். மருத்துவமனையில் இறந்த அவரது பூத உடல் ஆம்புலன்ஸில் வைத்து தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் அவரது பூத உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுக சார்பில் தமிழக அரசிடம் நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதிலாக வேறு இடம் தர அரசு தயாராக உள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திரண்டுள்ள தொண்டர்கள் வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

இதன் காரணமாக ஒரு பதற்றமான சூழலே தமிழகத்தில் நிலவி வந்தது. மேலும் திமுக சார்பில், மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷிடம் மனு ஒன்று தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று இரவு 11.30 மணிக்கு பின்னர் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பில் வைத்து விசாரித்தனர்.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சன்முக சுந்தரம், வில்சன் ஆகியோரும், அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இதனை விசாரித்த நீதிபதிகள் காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கும் என வழக்கை காலை 8 மணி வரை ஒத்திவைத்துள்ளனர். காலை 8 மணிக்குள் சென்னை மாநகராட்சி, தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனையடுத்து இன்று காலை விசாரணை தொடங்கியது. திமுக மனுவையும், அரசு தரப்பு பதில் மனுவையும் பதிவு செய்வதாக விளக்கம் அளித்தனர் நீதிபதிகள். இதனையடுத்து திமுக தரப்புக்கும், அரசு தரப்புக்கும் இடையே காரசார விவாதங்கள் நடந்தது. இரு தரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதிகள், மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குமாறு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது திமுகவினருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.