கலைஞருக்கு மெரினாவில் இடம்?: காலை 8 மணிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

கலைஞர் கருணாநிதியை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய திமுகவினர் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை மீண்டும் காலை 8 மணிக்கு விசாரிக்க உள்ளதாக ஒத்திவைத்துள்ளனர்.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

மருத்துவமனையில் இறந்த அவரது பூத உடல் ஆம்புலன்ஸில் வைத்து தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய திமுக சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் கலைஞரை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதிலாக வேறு இடம் தர அரசு தயாராக உள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவேரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் இல்லத்தின் முன்பும் திரண்டுள்ள தொண்டர்கள் வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இதன் காரணமாக ஒரு பதற்றமான சூழலே தமிழகத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில், மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷிடம் மனு ஒன்று தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று இரவு 10.30 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனையடுத்து இந்த மனுவை 11.30 மணிக்கு பின்னர் நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குடியிருப்பில் வைத்து விசாரித்தனர். திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் சன்முக சுந்தரம், வில்சன் ஆகியோரும், அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இதனை விசாரித்த நீதிபதிகள் காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கும் என வழக்கை காலை 8 மணி வரை ஒத்திவைத்துள்ளனர். காலை 8 மணிக்குள் சென்னை மாநகராட்சி, தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு. இதனையடுத்து பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.