இன்னும் நான் தவறு செய்வேன். அப்போ வச்சு செய்யுங்க: கஸ்தூரி வேண்டுகோள்

kasturi

நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். எந்த சம்பவம் நடைபெற்றாலும் அது குறித்து சிறிதும் அச்சப்படாமல் தனது கருத்தை நைய்யாண்டித்தனமாக பதிவிட்டு வருபவர். தற்போது அவர் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக கஸ்தூரி ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் வகையில் படமும் வாசகங்களும் இருந்தன. ஆனால் கடும் எதிர்ப்புகள் எழவே உடனடியாக அந்த ட்விட்டை நீக்கி மன்னிப்பு கோரினார். ஆனாலும் திருநங்கைகள் கடும் கோபத்தில் இருந்தனர். நேற்று கஸ்தூரி வீட்டை திருநங்கைகள் முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாகவும் அறிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எவ்விதம் உள்நோக்கமும் இல்லாமல் வேடிக்கையாக நினைத்து நான் வெளியிட்ட பதிவு நான் மிக மதிக்கும் எனது சகோதர, சகோதரிகள் பலரது மனதை புண்படுத்தியிருக்கிறது. இதற்காக நேற்றே மன்னிப்பு கேட்டேன். அந்தப் பதிவையும் நீக்கிவிட்டேன். அதன்பிறகும் நான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து சிலர் பரப்புகிறார்கள். இது அந்த சகோதர சகோதரிகளின் மனதை புண்படுத்துவதுடன், என்னையும் காயப்படுத்துகிறது. தயவு செய்து இதை செய்யாதீர்கள்.

நானும் மனுஷிதான்! தவறு செய்யாமல் யாரும் இருந்துவிட முடியாது. இன்னும் நான் தவறு செய்வேன். அப்போ வச்சு செய்யுங்க. இப்போ இதை பிரச்னையாக்காமல் விட்டுவிடுங்கள்’ என கஸ்தூரி கூறியுள்ளார்.