விக்ரம்-ஹரி இணையும் ‘சாமி 2’ படத்தில் கீர்த்திசுரேஷ்

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள ‘சாமி 2’ படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் அவர் தமிழில் அஜித் தவிர கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் குறுகிய காலத்தில் ஜோடியாக நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஸ்கட்ச்’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம், விரைவில் ‘சாமி 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் பவன்கல்யாண் ஜோடியாக ஒரு படமும், நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது தனது வாழ்நாள் கனவு என்று கூறி வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்த படத்தில் அஜித்துடன் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்