கென்யா நாட்டை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர் டெல்லியில் வேலை பார்த்து வருகிறார். அவர் தெற்கு டெல்லியின் சத்தர்புரா பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். இவரை 10 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கடந்த புதன் கிழமை தனது நண்பர்கள் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்ட அந்த பெண் பின்னர் வீடுதிரும்புவதற்காக எம்ஜிசாலை அருகே வாடகை காருக்காக காத்திருந்தார். அப்போது அவர் அருகே வந்து நின்ற ஒரு சொகுசு காரில் இருந்தவர்கள் எங்கே போகனும் என கேட்ட தாங்க இறக்கிவிடுவதாக கூறினர். அந்த காரில் மூன்று பேர் இருந்தனர்.

நேரம் அதிகமாகிக்கொண்டே போவதாலும், வாடகை கார் நீண்ட நேரமாக வராததாலும் அந்த பெண், அவர்களுடன் காரில் செல்ல சம்மதித்தார். அவர் காரில் ஏறியதும் அந்த பெண்ணை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்த ஆரம்பித்தனர். இடையில் இரண்டு பேர் காரில் ஏறினர், அவர்கள் அனைவருமே மது போதையில் இருந்தனர்.

இந்நிலையில் ஒரு வீட்டின் முன் காரை நிறுத்திய அவர்கள் அந்த பெண்ணை உள்ளே இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் ஐந்து பேர் அங்கு வந்தனர். அவர்களும் அந்த பெண்ணை அடுத்தடுத்து பலாத்காரம் செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் நடந்ததை கூறினார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

இந்த கொடூர வக்கிர சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே கட்டுமான பொருட்களை சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கதா கிராமத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்ய உள்ளனர்.