கேரளாவில் தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த மாநிலமே தண்ணீர் மூழ்கியது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே 30 முதல் தற்போது வரை இந்த மழை வெள்ளத்தால் 373 பேர் பலியாகியுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 29-ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. சீரான இடைவெளியில் பெய்த இந்த மழையானது கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் பெருமழையாக தொடர்ந்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டது.

நிலச்சரிவால் வீடுகளும், வாகனங்களும் சிக்கிக்கொண்டன, பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டன. 54.11 லட்சம் மக்கள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.47 லட்சம் மக்கள் 5645 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் இதுவரை 87 பேர் காயமடைந்துள்ளதாகவும், 32 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 373 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.