சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம் என சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதனால் சர்ச்சையும் வெடித்துள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த மாநிலமும் விழிபிதுங்கி நிற்கிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் இந்த மழை வெள்ள பாதிப்பிற்கு சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைய முயற்சிப்பதே காரணம் என சிலர் கூறுகின்றனர். 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மழை வெள்ளத்துக்கு காரணம் இது தான் என கூறப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி இந்தனை டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார். கேரளா சின்னாபின்னமாகியுள்ளது. மக்கள் இறக்கின்றார்கள். வெள்ளத்தில் சிக்கி பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்த நேரத்தில் பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய முயற்சிப்பதே கேரள மழை வெள்ளத்துக்கு காரணம் என சில சிறந்த விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். இது மனிதாபிமானமற்ற அணுகுமுறை. அப்படியென்றால் குஜராத் நிலநடுக்கத்துக்கும், உத்ரகண்ட் வெள்ளத்துக்கும் என்ன காரணம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.