ஒரு தெருவில் தனியாக வரும் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் ஒரு மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களான வாட்ஸ்-அப், முகநூல் ஆகியவற்றில் அதிகம் பகிரப்பட்டது. இதைக்கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். யாருமற்ற சாலையில் ஹெல்மெட் அணிந்து, முகவரி கேட்பது போல் நடிக்கும் இதுபோன்ற நபர்களை நம்ப வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து இந்த வீடியோவை பகிர்ந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றதும், அந்த நபரை போலீசார் ஒரு மணிநேரத்தில் பொறி வைத்து பிடித்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த புதன்கிழமை திருவணந்தபுரம் திருமளா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தை கேரள போலீசார் கண்ட்ரோல் ரூமில் பார்த்து அலார்ட் ஆகியுள்ளனர். உடனடியாக அவனின் மோட்டார் சைக்கிள் எண்ணை குறித்துக்கொண்டு அந்த பகுதி போலீசாரை அலார்ட் செய்துள்ளனர். இதை வயர்லெஸ் மூலம் கேட்ட பிஜ்ஜு என்கிற காவலர் ஒரு இடத்தில் அந்த பைக் பார்க் செய்யப்பட்டிருப்பதை கண்டார். சற்று நேரம் அவர் அங்கு காத்திருந்தார்.

அப்போது ஒருவன் அந்த பைக்கை எடுக்க வந்துள்ளான். அவனை பிஜ்ஜு பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றார். அவன், திருவனந்தபுரம் பூஜாபுரா பகுதியை சேர்ந்த சஜீத் என்பதும், அவன்தான் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றதையும் போலீசார் உறுதி செய்தனர். அதன்பின் அவன் கைது செய்யப்பட்டான். ஒருமணி நேரத்தில் அவன் கைது செய்யப்பட்டதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.