கடந்த சிலநாட்களாக நடைபெற்று வந்த திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் நேற்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்ததாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று விஷால் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது: சினிமாத்துறை முழுக்க வெளிப்படைத்தன்மைக்கு வருகிறது. எனவே, இனிமேல் எல்லா திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை கணினி மூலமாகவே நடைபெறும். மேலும், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது எக்ஸ்ட்ராவாக வசூலிக்கப்படும் கட்டணம் இனிமேல் வசூலிக்கப்பட மாட்டாது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்ய தயாரிப்பாளர் சங்கமே முடிவெடுத்துள்ளது.

திரையரங்குகளுக்கு வரும் மக்களுக்கு எளிதாக இருக்கும் வகையில், படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும்” என்று கூறினார். மேலும்வேலை நிறுத்தம் குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்ததால் வரும் வெள்ளி அன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது