ஜெயம் ரவி நடிக்கும் 24 ஆவது படமான கோமாளிப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரவலாகக் கவனம் பெற்று வருகிறது.

ஜெயம் ரவி தான் கடைசியாக நடித்த டிக் டிக் டிக் மற்றும் அடங்கமறு ஆகியப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து புதுமுக இயக்குனர் பிரதீப் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோரும் முக்கியமானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதுகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் நேற்று மாலை டிவிட்டரில் வெளியானது. இந்தப்படத்திற்கு கோமாளி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி சர்க்கஸ் கோமாளி உள்ளிட்ட 9 கெட் அப்களில் தோன்ற இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இப்படம் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல்வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது.

இந்தப்படத்தை அடுத்து ஜெயம்ரவி மகிழ் திருமேணி, செல்வராகவன், ஹரி மற்றும் அகமது ஆகியோரின் படங்களில் வரிசையாக நடிக்க இருக்கிறார்.