சொல்வதெல்லாம் உண்மையிலிருந்து விலகும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்?

நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடைவிதித்துள்ளதையடுத்து அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பம் மற்றும் தனி நபர் பிரச்சனைகளை முன்வைத்து அதனை தீர்த்து வைக்கும் களமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்ச்சியை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகிறது.

பல நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ளன. மேலும் பல நடிகைகள் கூட இதற்கு எதிராக குரல்கொடுத்துள்ளனர். பல எதிர்ப்புகளையும் மீறி இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட நாகப்பன் என்ற நபர் கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து கல்யாண சுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் இந்த நிகழ்ச்சி தனி மனித உரிமையில் தலையிடுகிறது. இதனால் நாகப்பன் என்ற நபர் 2016-இல் தற்கொலை செய்துகொண்டதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே விதிமுறைகளை மீறிச் செயல்படும் தொலைக்காட்சி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்தது. மேலும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலாளர், விருதுநகர் ஆட்சியர், தமிழ்நாடு கேபிள் டிவி நிர்வாக இயக்குநர், நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஜூன் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தனது கருத்தை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், நான் இயக்கவிருக்கும் அடுத்தத் திரைப்படத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அதனால் சமூக வலைதளங்களில் சிறு இடைவெளி விடுகிறேன். உங்களுடைய ஆசியும் ஆதரவும் சொல்வதெல்லாம் உண்மைக்குத் தேவை. இந்தத் தடை என்பது தற்காலிகமானது. இது சரியாகிவிடும். ஆனால், அதைப் பற்றி எந்தவொரு வாதத்தையும் நான் விவாதிக்க விரும்பவில்லை. சேனல் பார்த்துக் கொள்ளும், தற்போது அதிலிருந்து நான் நகர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தற்போது அதிலிருந்து நான் நகர்கிறேன் என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியிருப்பது, அவர் நிகழ்ச்சியை விட்டு விலகுவதை தான் என பேசப்படுகிறது.