தனுஷ் படங்களின் லேட்டஸ்ட் அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’ படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இதுமட்டுமில்லாமல், வடசென்னை, மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம் என இவரது பட வரிசை நீண்டுகொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘காலா’ படத்தையும் இவர் தயாரித்து வருகிறார். இந்த படங்களில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்பதை கீழே பார்ப்போம்.

தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். மூன்று பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பாகம் மட்டுமே இரண்டரை மணி  நேரம் ஓடக்கூடியதாக இருக்குமாம். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே இந்த படம்தான் அவருடைய சிறந்த படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

தனுஷ் நடிக்கவிருக்கும் மற்றொரு படமான  ’மாரி-2’ படத்தை முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே இயக்குகிறார். ஆனால், முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த காஜல் அகர்வால் இப்படத்தில் கிடையாதாம். அதோடு, புதிதாக 3 கதாபாத்திரங்களை இந்த 2-ஆம் பாகத்தில் அறிமுகம் செய்யவிருக்கிறார்களாம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டாவும்’, ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி பகிர்’ படமும் அடுத்தடுத்து வெளியிடும் முடிவாக இருக்கிறதாம்.

தனுஷ் தயாரிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்தின் ரிலீசுக்கு பிறகே ‘காலா’வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ். இதுமட்டுமில்லாமல், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் தனுஷ்.