ஆலங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் 515 ஆம்புலன்ஸ் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் புதிய வீட்டை கட்டித்தரவுள்ளார்.

கஜா புயலில் வீடு இழந்த 50 பேருக்கு வீடு கட்டி தரப்போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். தொடக்கமாக, புதுக்கோட்டையில் வீடிழந்த ஒரு மூதாட்டிக்கு வீடு கட்ட அடிக்கல் நாட்டி இந்த பணியை லாரன்ஸ் துவங்கினார்.

இந்நிலையில்தான், புதுக்கோட்டை ஆலங்குடியை சேர்ந்த 515 கணேசனின் வீடும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது என்பதை தொலைக்காட்சி வழியாக அவர் தெரிந்துகொண்டார்.

515 ஆம்புலன்ஸ் என்கிற பெயரில் கர்ப்பிணி பெண்கள், விபத்தில் அடிபட்டவர்கள் என பலருக்கும் இலவசமாக தனது அம்பாசிடர் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியை கடந்த 40 வருடங்களாக செய்து வருபவர்தான் இந்த 515 கணேசன்.
இவருக்கும் வீடு கட்டித்தர முடிவெடுத்த லாரன்ஸ், அங்கேயே தங்கி, இதற்கான ஏற்பாடுகளை செய்து நேற்று அதற்கான பூமி பூஜையை நடத்திய பின்பே ராகவா லாரன்ஸ் சென்னை திரும்பியிருக்கிறார்.