லண்டன் மாநகரத்தில் உள்ள கேம்டன் டவுனில் ஒரு பேருந்தில் சென்ற இரண்டு பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

லண்டனில் பேருந்தில் மெலானா கெய்மோட் என்ற பெண் தனது பெண் தோழியுடன் கடந்த மே 30 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பேருந்தில் ஏறிய ஆண்கள் சிலர் அவர்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என நினைத்து கேலி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களைத் தங்களுக்கு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

அவர்கள் இருவரும் மறுக்கவே அவரக்ளைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்த இரண்டு பெண்களுக்கு முகம் முழுவதும் ரத்தம் வர ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

லண்டன் போன்ற முற்போக்கான ஊர்களில் கூட ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.