இது வேண்டாம் ; அதை மட்டும் பார்க்கட்டும் விஷால் – எஸ்.வி.சேகர் பேச்சு

நடிகர் சங்க பணிகளை மட்டும் விஷால் பார்க்கட்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு வேண்டாம் என நடிகர் எஸ்.வி. சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில் விஷால் தலையில் ஒரு அணி, கே.ஆர் தலைமையில் ஒரு அணி, ராதாகிருஷ்ணன் அணி என மொத்தம் 3 அணிகள் போட்டியிடுகிறது.

ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு சரத்குமார் மற்றும் ராதாரவி தரப்பின் ஏராளமான புகார்களை கூறி, அவர்களுக்கு எதிராக களம் இறங்கி அதில் வெற்றியும் பெற்ற விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அதன் தலைவர் தாணு ஆகியோருக்கு எதிராக களம் இறங்கி, ஒரு அணியை உருவாக்கி போட்டியிடுகிறார். அவர் அணியில் இயக்குனர் மிஷ்கின், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் தயாரிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது
நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் அணிக்கு ஆதரவாக செயல்பட்ட நடிகர் எஸ்.வி.சேகர் இந்த தேர்தலில் ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டத்தில் பேசிய அவர் “ விஷால் நடிகர் சங்க செயலாளராக இருக்கிறார். அங்கு நிறைய பணிகள் இருக்கிறது. அதை அவர் செய்யட்டும். அதற்கு அவருக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தல் அவருக்கு வேண்டாம்” என அவர் பேசினார்.