புதுடெல்லி: டெல்லியில் டாக்ஸி ஒட்டுநரை கொடூரமாக கொலை செய்து அவரது உடலை சிறிய துண்டுகளாக வெட்டி, சாக்கடையில் வீசிய திருமணம் ஆகாத ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியின் ஷகார்பூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்த் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த ஒருவாரமா காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கோவிந்த்தின் காரை ஜிபிஎஸ் உதவியுடன் தேடினர். உத்தரப்பிரதேசத்த்தின் கபாசேரா என்ற இடத்துக்கு சென்ற பிறகு கோவிந்தின் காரில் ஜிபிஎஸ் கருவி வேலை செய்யாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி கேமரா உதவியுடன் கோவிந்தின் காரை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் மெகருலி, குருகிராம் இடையே கோவிந்தின் காரில் ஒரு ஜோடி சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ஜோடியை மடக்கி பிடித்து போலீசார், விசாரணை நடத்தினர்.

அந்த காரில் சென்ற ஜோடி, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பரகத் அலி (34) மற்றும் அவரது காதலி சீமா சர்மா (30) என்பது தெரியவந்தது. இவர்கள் தான் டெல்லி, உத்தரப்பிரதேச மாநில எல்லையில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஜோடி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் கோவிந்த் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தை பணம் பறிக்கும் நோக்கில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக பரஹத் அளித் ஜோடி போலீசாரிடம் கூறுகையில், கால் டாக்ஸி ஓட்டுனர் கோவிந்தை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்தோம். இதற்காக ஜனவரி 29ம் தேதி எம்ஜி ரோட்டில் இருந்து காஜியாபாத் செல்வதற்காக கோவிந்தின் காரை வாடகைக்கு எடுத்தோம். வழியில், கோவிந்துக்கு மயக்க மருந்து கலந்த டீ மற்றும் பிஸ்கட்டை கொடுத்தோம். இதை சாப்பிட்டவுடன் கோவிந்த் மயங்கிவிட்டார்.

இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறித்த நாங்கள் கோவிந்தை கொலை செய்தோம் அடுத்த நாள் (ஜன.30) கோவிந்தின் உடலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதை பேக் செய்து கிரேட்டர் நொய்டாவில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டு தப்பினோம் என்றனர். இதையடுத்து அவர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்கு பதிவு செய்த போலீசார், பரஹத் அலி ஜோடியிடம் இருந்து ஹுண்டாய் எக்சன்ட் கார் மற்றும் கோவிந்தின் மொபைல்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.