இந்தியன் 2 படத்தின் வேலைகளில் கவனம் செலுத்துமாறு இயக்குனர் ஷங்கருக்கு லைகா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பிலேயே திட்டமிட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு செலவானது மற்றும் மேக்கப் குறைபாடுகள் போன்ற காரணங்களால் படத்தினை கிடப்பில் போட்டது லைகா. மேலும் கமல் மக்களவைத்தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதும் முக்கியக்காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தை வேறு சில தயாரிப்பாளர்களுக்கு மாற்றி படத்தை தொடரலாம் என ஷங்கர் எடுத்த முடிவுகளும் தோல்வியில் முடிந்தன. இதனால் பிரபாஸை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் ஷங்கர் இறங்கினார். இதையறிந்த லைகா நிறுவனம் இப்போது ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ‘ மற்ற வேலைகளை விட்டுவிட்டு இந்தியன் 2 வேலைகளை உடனடியாகத் தொடங்குங்கள்’ என வலியுறுத்தியுள்ளது. இதனால் இந்தியன் 2  பிரச்சனை உச்சகட்டத்தில் உள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்போது கமல் பிக்பாஸ் சீசன் 3 ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.