நடிகர் பாபி சிம்ஹா நடிக்கும் அக்னிதேவ் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிகை மதுபாலா நடிக்க உள்ளதால் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ கொடுக்கிறார் அவர்.

நடிகை மதுபாலா இயக்குநர் பாலசந்தரின் அழகன் படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம் மூலம் இந்திய அளவில் அறியப்பட்டார் மதுபாலா. தொடர்ந்து, இயக்குநர் ஷங்கரின் ஜென்டில்மேன் படத்திற்கு பின்னர் இந்தி படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் அவர். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் மதுபாலா நடித்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் மதுபாலா பின்னர் 2008-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றின் மூலம் நடிக்க வந்தார். இவர் கடைசியாக வாயை மூடி பேசவும் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த படம் இறங்கி நான்கு வருடத்திற்கு பின்னர் தற்போது அக்னிதேவ் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரீ கொடுக்கிறார்.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இந்த படத்தை இயக்குகின்றனர். பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கும் இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவலைத் தழுவி, அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் பட பூஜை முடிந்து முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் மதுபாலா நடிக்க உள்ளார்.