இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் காற்று வெளியிடை தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும், இப்படம் கொரிய படம் ஒன்றின் தழுவலாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. முக்கியமாக பாகிஸ்தான் சிறையிலிருந்து கார்த்திக் சிலருடன் தப்பிக்கும் காட்சிகள் குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மணிரத்னம் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

காற்று வெளியிடை எந்த படத்தின் காப்பியும் கிடையாது. 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இந்திய விமானி திலீப் பருல்கர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுடப்பட்டார். ஆனால், அவர் துணிச்சலாக செயல்பட்டு 1972ம் ஆண்டு ஆகஸ்டு 13ம் தேதி மல்விந்தர் சிங், ஹரிஷ் உள்ளிட்ட 13 பேரோடு அங்கிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்தார்.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஃபெயித் ஜான்ஸ்டன் என்பவர் ஃபோர் மைல்ஸ் டூ ஃப்ரீடம் என்கிற நாவலை எழுதியுள்ளார். அதில் இடம்பெற்ற சம்பவங்கள் இப்படத்திலும் இடம் பெற்றுள்ளன. சிறையில் இருந்து தப்பிப்பதற்காக கார்த்தியும் அவரது நண்பர்களும் செய்யும் விஷயங்கள் உண்மையாக நடந்த சம்பவங்களின் தொகுப்பு ஆகும் என அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.