இந்திய இதிகாசங்களில் முக்கிய ஒன்றான மகாபாரதம் சினிமாவாக எடுக்கப்படவுள்ளது.

மகாபாரதக் கதைகள் தொலைக்காட்சிகளில் பலமுறை தொடர்களாக எடுக்கப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றியடைந்துள்ளது. ஆனால், அதிக பட்ஜெட் காரணமாக அந்த கதையை யாரும் சினிமாவாக எடுக்கவில்லை. பாகுபலியை எடுத்த இயக்குனர் ராஜமௌலி, மகாபாரத கதையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அது தற்போது இல்லை என சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், மலையாள பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன், மகாபாரதத்தை சினிமாவாக எடுக்க முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசிக்கும் இந்திய தொழில் அதிபர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

இதில் நடிகர் மோகன்லால் பீஷ்மர் கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. மேலும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் 2020ம் ஆண்டிலும், அடுத்த 3 மாதம் கழித்து அடுத்த பாகத்தையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மகாபாரத கதையை மையமாக வைத்து, பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பீமனின் பார்வையில் ரண்டமூழம் என்ற தலைப்பில் எழுதிய நாவலை வைத்து இப்படம் கதையமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.