மக்களவைத் தேர்தல் முடிவுகளில் மக்கள் நீதி மய்யம் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பாதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்திய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணிக் கட்சிகள் 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனித்துப் போட்டியிட்ட அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் எந்த தொகுதியிலும் முன்னிலைப் பெற முடியவில்லை.

ஆனால்  முதல்முறையாக தேர்தலை சந்தித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 10 தொகுதிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாம் தமிழர் மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளைப் பின்னுக்கு தள்ளியுள்ளது.  படித்தவர்கள் மற்றும் நகர்ப்புறங்கள் அடங்கிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்திற்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.