புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேஷ் என்ற மோசடி மன்னன் தனக்கு ஏற்கனவே இரண்டு கல்யாணம் ஆனதை மறைத்து மூன்றாவதாக 17 வயது சிறுமியை கல்யாணம் செய்து போலீசில் சிக்கியுள்ளார்.

சோலை கணேஷ் சிங்கப்பூரில் வேலைபார்த்தபோது தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்தும் ஆனதை மறைத்து, சிங்கப்பூரில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர் வசதியான பெண் என்பதால் வரதட்சணையாக பிளாட் ஒன்றையும் தன்னுடைய பெயரில் பதிவு செய்துகொண்டார்.

இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த சோலை கணேஷ் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆனதை மறைத்து மூன்றாவதாக 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். சோலை கணேஷ் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வருவதால் சிங்கப்பூரில் உள்ள மனைவிக்கு சந்தேகம் வந்துள்ளது. பின்னர் சோலை கணேஷ் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டதை தெரிந்துகொண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தன்னை ஏமாற்றி 72 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து விட்டதாகவும், இனியும் யாரும் ஏமாறக்கூடாது என்ற நோக்கத்தில் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார் அந்த பெண். இதனையடுத்து, மோசடி மன்னன் சோலை கணேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.