ஐபில் கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை அவரின் கணவரும், அவரின் குடும்பத்தினரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மல்டா பகுதியில் வசிப்பவர் சுவேந்து தத்தா. இவர் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரோடு சேர்ந்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக பல லட்சங்களை பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இப்படி தொடர்ந்து பெட்டிங்கில் ஈடுபடுவதற்கு அவரின் மனைவி அர்பிதா தாஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவதால், சுவேந்து தத்தா பெட்டிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் அவரது மனைவி அர்பிதா கடும் எதிர்ப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த சுவேந்துவும், குடும்ப உறுப்பினர்களும் அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஆசிட்டை ஊற்றி குடிக்க செய்தனர். இதில், உடலில் உள்ள உறுப்புகள் வெந்து போய், அவர் மயக்கமாக கிடந்துள்ளார்.

இந்த தகவலை அர்பிதாவின் மகன் தனது தாத்தாவும், அர்பிதாவின் தந்தைக்கு தெரிவித்தார். மேலும், அர்பிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பதாகவும் கூறினார். ஆனால், அர்பிதாவின் தந்தை மருத்துவமனைக்கு சென்ற போது அவரால் தன் மகளை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. அர்பிதா இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அர்பிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அர்பிதாவின் கணவர் சுவேந்து மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.