இயக்குனர் மணிரத்னம் நேற்று இரவு அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்துள்ளதாக வதந்திகள் பரவின.

இயக்குனர் மணிரத்னம் இப்போது தனது கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் முன் தயாரிப்புப் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இயக்குனர் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. அவருக்கு ஏற்கனவே இரண்டுமுறை நெஞ்சு வலி வந்து சிகிச்சைப் பெற்று வருவதால் அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி வந்ததாக கோலிவுட் வட்டாரத்தில் வதந்திகள் பரவின.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவரது செய்தித் தொடர்பாளார் ‘மணிரத்னம் அவர்கள் வழக்கமான பரிசோதனைக்காகவே அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனைகள் முடிந்ததும் அவர் உடனே அவர் வீடு திரும்பிவிட்டார். இன்று அவர் வழக்கம்போல் அலுவலகம் சென்று தனது வழக்கமான பணிகளில் ஈடுபடுவார்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மணிரத்னம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.