‘காற்று வெளியிடை’ படத்திற்கு பிறகு மணிரத்னம் பெரிய நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க ஆயத்தமாகிவிட்டார். அந்த பெரிய நட்சத்திர பட்டாளங்கள் யார் யார்? என்பது சமீபத்தில் வெளியானது. அதன்படி, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, நானி, பஹத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் பண்ணவிருக்கிறார். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தனது 17-வது தயாரிப்பாக தயாரிக்கவிருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தை எடுக்கவிருக்கிறார்களாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும் தற்போது அறிவித்துள்ளார்கள்.

பெரிய நட்சத்திர பட்டாளங்கள், பெரிய பட்ஜெட் என மணிரத்னம் புதிய களத்தில் இறங்கியிருக்கும் மணிரத்னத்தின் இந்த புதிய படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.