ரஜினிகாந்த் மண்டையில ஒண்ணுமே இல்லை: மார்க்கண்டேய கட்ஜூ ஆவேசம்

கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பதே சமூக வலைத்தளங்களின் டிரெண்டாக உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் ரஜினிகாந்த் வந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது என்றும், ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வருமா? என்றும் பலரும் பலவிதமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சுகுறித்து முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது ஃபேஸ்புக்கில் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படத்தபோது, ஒருசமயம் தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசன் நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அவரிடம் தீர்வுகள் இருக்கின்றனவா? அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.

மார்க்கண்டேய கட்ஜூவின் இந்த கருத்து ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.