புதுதில்லி: புது வருஷத்தில் புது காரு வாங்க ஆசைப்பட்டவங்களுக்கு மாருதி சுசுக்கி நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கார் வாங்க ஆசையிருந்தால் 2018ம் ஆண்டின் இறுதிமாதமான இம்மாதத்தில் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கார்களின் விலையை கணிசமாக அதிகரிக்க முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பொதுவாக கார் வாங்க டிசம்பரில் யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் எந்த வருடம் வாங்கிய கார் என்று, அந்த காரை மீண்டும் விற்கும் போது ஒரு மாதத்தில் ஒருவருடம் தள்ளிப்போகும் என்பதால்தான். இதனை சரிகட்டுவதுக்காக ஒவ்வொரு ஆண்டும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் டிசம்பரில் அதிரடியான தள்ளுபடியும், ஜனவரியில் விலை உயர்வையும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மாருதி சுசுக்கி நிறுவனம் தனது கார்களின் விலையை ஜனவரி முதல் அதிகரிக்க முடிவு செய்துள்ளது, பொருட்களின் விலை மற்றும் அதீத அந்நிய செலாவணி விகிதங்கள் காரணமாக விலை அதிகரிப்பு முடிவினை எடுத்துள்ளது.

மாருதி கார்களின் மாடலுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.