ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘மெர்சல்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்துள்ளது. தமிழ் படங்கள் செய்த சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்நேரத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் ‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை தான் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருப்பதாகவும், எனவே ‘மெர்சல்’ என்ற தலைப்பை பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு அந்த பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்ய தடை செய்தது. மேலும், தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸுக்கும் பதிலளிக்க உத்தரவிட்டது.

கோர்ட்டில் ‘மெர்சல்’ தலைப்பை பயன்படுத்த தடை வருமேயானால், அந்த படத்திற்கு வேறு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஒரு பக்கம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இறுதியில், ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பையே வைக்கலாமா? என்ற ஒரு விருப்பமும் எழுந்தது. என்றாலும், வரும் அக்டோபர் 3-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு வரவிருக்கிறது. அன்றைய தினம் இந்த பிரச்சினையின் திசை எந்தப்பக்கம் திரும்பும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.