மறைந்த முன்னள் முதல்வர் ஜெயலலிதா கொள்ளையடித்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் காவிரி நதி நீர் மீட்பு வெற்றிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சியை கைப்பற்ற நினைத்த தினகரன் 18 எம்எல்ஏக்களுக்கும் பதவி ஆசையை காட்டி தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.

ஆனால் தினகரனால் ஆட்சியமைக்க முடியாததால் ஸ்டாலினை முதல்வராகவும், தன்னை துணை முதல்வராகவும் உருவாக்க திட்டம் தீட்டினார். எனவே தான் சபாநாயகர் தனபால் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் எப்படியாவது இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டும் என தினகரன் மற்றும் ஸ்டாலின் துடித்து வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் 18 எம்எல்ஏக்களும் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர் என கூறி கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினர்.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சை கேட்ட மேடையில் இருந்தவர்கள் அவரை வியப்புடன் பார்த்தனர். இது அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.