கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேசினார். இந்நிலையில் அவரை கிண்டல் செய்யும் விதமாக கட்டிப்பிடித்தால், காவிரி நதி நீர்ப் பிரச்சினைகள் தீரும் என்று கமல் நினைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காவிரி நீர் பிரச்சனைக்கு இரு மாநிலங்களும் பேசி தீர்வு காணவேண்டும் என கமல் கூறினார். மேலும் கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் இது தொடர்பாக சந்தித்தார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து, அதனை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்ட நிலையில் கமல் இந்த கருத்தை வெளியிட்டதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கமலின் கருத்துக்கு பதில் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், கமல், குமாரசாமி சந்திப்பானது, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம்பெற்ற கட்டிப்பிடி வைத்தியம் என்ற வசனத்தைத் தனக்கு நினைவூட்டுகிறது. குமாரசாமியைக் கட்டிப்பிடித்தால், அரசியலிலும் எல்லா பிரச்சினைகளும் தீரும் என்று நினைக்கிறார் கமல்.

அடிப்படையான விஷயம் எதுவும் தெரியாமல் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதை நினைத்து வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன். நடிகர் ரஜினிகாந்தும் அதனை ஆதரித்து பேசியதை ஏற்க முடியாது என்றார்.