டாஸ்மாக் மூலமாக வரும் வருமானத்தில் தான் புதிய பள்ளிகள் திறப்பது, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பது எல்லாம் நடக்கிறது. அவர்கள் குடிக்கவில்லை என்றால் தமிழகத்தில் நடக்கும் பணிகள் எல்லாம் கெட்டுபோய்விடும் என பள்ளி விழா ஒன்றில் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.

நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக தொண்டர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அமைச்சர் தனது பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டு அந்த நபரை அப்புறப்படுத்தச் சொன்னார்.

அதன் பின்னர் தனது பேச்சை தொடங்கிய அமைச்சர், டாஸ்மாக் கடை வருமானம் முழுவதும் என்னுடைய துறைக்குத்தான் வருகிறது. இந்த வருமானத்தை வைத்துதான் புதிய பள்ளிகள் திறப்பது, ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. நான் போய் அவரை குடிக்க வேண்டாம் என்று சொன்னாலும், என்னுடைய பிழைப்புதான் கெட்டுப்போகும். தமிழகத்தில் நடக்கும் பணிகள் எல்லாம் கெட்டுபோய்விடும் என்று பேசினார்.

மது அருந்துவதை கண்டிக்காமல் அதனை மறைமுகமாக ஊக்கப்படுத்தும் விதமாக அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு அமைச்சர் இப்படியா பேசுவது என சர்ச்சை எழுந்துள்ளது