அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு புதிய சிக்கல் வந்துள்ளதால் அவர் தனது அமைச்சர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யலாம் அல்லது அந்த பதவியில் இருந்து முதலமைச்சரால் நீக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்பு மனு தாக்கல் செய்தபோது தான் வருமான வரி வரம்புக்குள் வராதவர் என குறிப்பிட்டிருந்தார். மேலும் அசையும் சொத்து 18,88,553 ரூபாய் எனவும், அசையாத சொத்து 19,11,963 ரூபாய் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திருத்தங்கலில் 75 செண்ட் நிலம் வாங்கியிருக்கிறார்.

அந்த நிலத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய். அமைச்சரான பின்னர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சேர்த்த சொத்து இது. அதனால், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த ஒருவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை இதனை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரம் முதல்வர் காதுக்கு போக, அவர் ரொம்பவே டென்ஷன் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேவையில்லாத புதிய சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் உள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிச்சு அமைச்சர் மீது தவறு உள்ளது என கூறினால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கித்தான் ஆகனும். எனவே அதற்கு முன்னதாக ராஜேந்திர பாலாஜியே தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.