வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண் தாதா மற்றும் அவரின் ஆட்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மானம்பாதி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது ஏழை சிறுமியை வேலை வாங்கி தருவதாக கூறி, அந்த சிறுமியின் வீட்டுக்கு எதிரே வசித்து வந்த வேளாங்கண்ணி என்ற பெண் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் 6 மாதம் கழித்து அந்த சிறுமியை அவரின் ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

அதன்பின், நான் வேலைக்கு செல்ல மாட்டேன் என சிறுமி அடம்பிடிக்க, வரவில்லை எனில் உன் நிலைமை மோசமாகி விடும் என வேளாங்கண்ணி தரப்பில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரிக்க, சிறுமி கூறிய விஷயங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

சென்னை சென்றதும் ஒரு வீட்டில் சிறுமியை வேளாங்கண்ணி அடைத்து வைத்துள்ளார். அங்கு, சிறுமியை இரு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர். அதன்பின் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி அவரை சென்னையில் பல விடுதிகள் மற்றும் ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக இந்த கொடுமை சிறுமி சந்தித்து வந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வேளாங்கண்ணியும் அவருக்கு உடந்தையாக இருந்த அற்புதராஜ் மற்றும் அவரின் ஆட்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.