திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் நாளை ஒருமானதாக தேர்ந்தெடுக்கபட உள்ள நிலையில் தாங்கள் இடைத்தேர்தல் வந்தால் பார்த்துக்கொள்வோம் என மு.க.அழகிரி கூறியுள்ளார்.

திமுகவில் இணைய முயற்சிகள் மேற்கொண்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணி செல்ல உள்ளதாகவும், அதில் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார். இதற்கான ஆலோசனை கூட்டத்தை மூன்று நாட்களாக நடத்தி வந்தார்.

தனக்கு பதவி ஆசை இல்லை எனவும், தான் மீண்டும் திமுகவில் இணைவதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறியிருந்தார் அழகிரி. இந்நிலையில் நேற்று திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர்கள் ஒரு மனதாக நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அழகிரி, அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தால் நான் என்ன செய்வது? என்னை என்ன முன்மொழியச் சொல்கிறீர்களா? அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. இதுகுறித்து அவர்களிடம் கேளுங்கள் என்றார். மேலும், நாங்கள் இப்போது வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இடைத்தேர்தல் வந்தால் வேட்புமனு தாக்கல் செய்வோம். அப்போது பார்த்துக்கொள்ளுங்கள் என்றார் அழகிரி.