முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென் மண்டல அமைப்பு செயலாளருமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படலாம் அல்லது அவர் புதிய கட்சி தொடங்கலாம் என கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து அமைதியாக இருந்து வந்தார். அவ்வப்போது ஸ்டாலினுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் கருத்துக்களை கூறிவந்தார்.

இதனையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக படுதோல்வியடைந்தது குறித்து பேசிய அழகிரி, ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றிபெறாது என்றார். இந்நிலையில் அழகிரி ஆதரவாளரும், மதுரை மாநகராட்சி முன்னாள் மேயருமான மன்னன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்த அழகிரி, அங்கு அரசியல் குறித்து பேசினார்.

மன்னன் உள்பட என்னுடன் இருப்பவர்கள் பதவிக்காக இருப்பவர்கள் அல்ல. ஆனால் இப்போது திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக இருப்பவர்கள்தான். அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அப்போது அங்கே எத்தனை பேர் இருப்பார்கள்? எத்தனைப் பேர் போவார்கள்? என்பது தெரியவரும். நான் அடுத்த வருடம் பேசலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் நண்பர்களின் வற்புறுத்தலால் இங்கு பேசவேண்டியதாகி விட்டது என்று தெரிவித்தார்.

தேர்தல் வரும்போது எத்தனை பேர் அங்கே அதாவது திமுகவில் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என தெரியவரும் என அழகிரி சூசகமாக தெரிவித்தது திமுகவில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.